பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பத்தினரை இரும்புக் கம்பியால் தாக்கிய ஊழியர்கள் – வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில் அதிர்ச்சி கிளம்பியது!
கொழும்பிலிருந்து விடுமுறைக்காக காலிக்கு வந்த குடும்பம் ஒன்று, பிரபல உணவகமொன்றில் ஏற்பட்ட வெறித்தனமான தாக்குதல் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
நேற்று (16) இரவு, அந்த குடும்பத்தினர் உணவு ஆர்டர் செய்து ஹோட்டலில் காத்திருந்த போது, 30 நிமிடங்களுக்கு பிறகு உணவு இல்லையென ஊழியர் ஒருவர் தெரிவித்ததிலிருந்து சர்ச்சை தீவிரமடைந்தது.
“உணவில்லையென்று சொல்ல 30 நிமிடங்கள் ஏன் ஆனது?” என கேட்ட கேள்வியே ஊழியர்களின் கோபத்தை கிளப்பியது.
திடீரென வாக்குவாதம் வெறித்தனமாக மாற, சுமார் 30 பேர் கொண்ட ஹோட்டல் ஊழியர்கள், இரும்புக் கம்பிகள், மரத்துண்டுகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பத்தினரை தாறுமாறாக தாக்கினர்.
இந்த தாக்குதலில்,
28 வயது இளைஞர் – தலையில் தீவிர காயம், ரத்தப்போக்கு
17 வயது சிறுவன் – கண்ணில் காயம், உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள்
14 வயது சிறுவன் – பல்வேறு உடல் பகுதிகளில் காயம்
தாக்குதலுக்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு மற்ற குடும்பத்தினர்கள் வரவே, அவர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வீடியோ ஆதாரங்களும், புகைப்படங்களும் தாக்கப்பட்டவர்களிடம் உள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன், அவர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், அரச அதிகாரிகளுக்கும் முறையான முறையில் புகார் அளிக்கப் போவதாக உறுதி தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது.
